Friday, November 19, 2010
இரண்டாவது தீபாவளி
இந்துக்களாலும், இந்துக்கள் என்று நம்பவைக்கப்பட்டவர்களாலும் கடந்த வாரம் தீபாவளி கோலாகோலமாகக் கொண்டாடப்பட்டது. சாதாரண மக்களின் தீபாவளி அவர்களின் வாழ்நிலையை போலவே எளிமையாக முடிந்து விடுகிறது. ஆனால் தீபாவளியே கொண்டாட முடியாத மக்கள் இருக்கும் நாட்டில் நடுத்தரவர்க்கம் அற்ப சந்தோசத்தையே பேரின்பமாக புளாங்கிதமடைந்து தீபாவளியை கொண்டாடுகிறது. தீபாவளி ஏன் கொண்டாட வேண்டும்? அதன் பின்னுள்ள தத்துவம் என்ன? கொண்டாடுவதால் யாருக்கு என்ன நலன்? போன்றவை இன்றும் முற்போக்காளர்கள் பேசும் விடயமாக மட்டுமே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் இவ்விடயங்கள் இவர்களின் அற்ப சந்தோசத்திற்கு பயனளிப்பைவையாக இல்லை என்பதுடன், பெரும்பாலானோர் தங்களது அற்ப சந்தோசத்தில் ஊறித் திளைக்கும் பிழைப்புவாதிகளாக உள்ளனர்!
நாரகாசூரன் என்பவர் யார்? அவர் எந்த மக்களின் பிரதிநிதி என்பன போன்ற விடயங்கள் அந்த சந்தோசத்தை இடையூறு செய்பவையாகவே பார்க்கப்படுகின்றன. இந்த அற்பவாதத்தை, பிழைப்புவாதத்தை தான் ஊடகங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன, ஊற்றி வளர்க்கின்றன. இதனுடைய நீட்சியே கடந்த வாரத்தில் எல்லா ஊடகங்களும் ஓபாமா புராணத்தை பாடிக்கொண்டிருந்ததும். ஓபாமா என்பவர் யார்? அவர் யாருடைய பிரதிநிதி, அவர் எதற்காக தீபாவளி கொண்டாட வேண்டும், போன்றவை மறைக்கப்பட்டு, அவர் தீபாவளி கொண்டாடியதை ஊடகங்கள் பரப்பிக்கொண்டிருக்க, மக்களும் அதை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.
இப்படிப்பட்ட நடுத்தர வர்க்கத்தின் சமூக அக்கறை எப்படி இருக்கிறது? தங்களுடைய அடிப்படை பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, குடிநீர், சாலை பிரச்சனைகளுக்கு கூட போராட வருவதில்லை. தனது பிரச்சனைக்கு கூட போராட பிறர் வரவேண்டும் என்று விரும்பும் பிழைப்புவாதிகளாக இருப்பதுடன், அப்படியே மக்கள் திரண்டு இவ்வடிப்படை பிரச்சனைகளுக்கு போராடினாலும் அவர்களை பார்த்து சலிப்படைந்து கொண்டும், முகம் சுழித்தும் நகர்வார்கள். இப்பிழைப்புவாதிகளுக்கு சமூக அக்கறை வந்தால் என்னவாகும்? அது தான் இரண்டாவது தீபாவளி.
கோவை மக்களும், பதிவர்களும் (மற்ற பலரும்) தீபாவளி கடந்து சென்ற சில நாட்களிலேயே இரண்டாம் தீபாவளியை கொண்டாடி இருக்கிறார்கள். கோவையில் குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மோகன்ராஜை கோவை நகர போலீஸார் சுட்டு கொன்றிருக்கிறார்கள். குழந்தைகளை கடத்தி கொன்றதை நாம் எவ்விதத்திலும் ஆதரிக்க முடியாது, நாம் மோகன்ராஜுக்காக வாதாடவும் இல்லை. ஆனால் மாபெரும் ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொள்ளும் இவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ’தான் குற்றவாளி அல்ல’ என்பதை நிருபிக்கும் உரிமையைக் கூட மறுக்கிறார்கள். போலி மோதல் கொலையை ஆதரித்து பட்டாசு கொளுத்தி, இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.
இந்த நீதித்துறையின் இழுத்தடிப்பும், அதனால் குற்றவாளிகள் தப்பித்து விடுவதுமே மோகன்ராஜ் கொலையை ஆதரிக்கும் பலரும் சொல்லும் காரணம். நீதித்துறையின் இழுத்தடிப்பும், குற்றவாளி தப்பிவிடுவதும் தான் பிரச்சனை என்றால் அதற்காக போராடலாமே? மாட்டார்கள். ஆனால் அதை செய்யாமல் ஜனநாயகமற்ற அராஜகத்தை ஆதரிப்பார்களாம், அதை நாம் அனைவரும் சமூக அக்கறை என்று ஏற்றுக்கொள்ளவேண்டுமாம்.
பல்வேறு வழக்குகளில் இந்த அரசும் நீதித்துறையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் எதிராக அநீதியிழைப்பது ஒரு புறமிருக்க, அரச ஒடுக்குமுறையின் ஒரு கருவியாக செயல்படும் ராணுவமும், காவல்துறையும், உரிமைக்காக போராடுவோர் முதல் பல அப்பாவிகள் வரை போலி மோதலில் கொன்று குவித்திருக்கின்றன. இவை எதற்காகவும் தார்மீக கோபத்தை எழுப்பாதவர்கள் தான் இன்று மோகன்ராஜ் கொலையை கொண்டாடுகிறார்கள்.
இஷ்ரத் ஜஹன் என்ற சாதாரண கல்லூரி மாணவியை அவர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே, தீவிரவாதி என்று பொய் குற்றம் சாட்டி படுகொலை செய்திருக்கிறார்களே அதற்கு என்கவுண்டரை ஆதரிப்போர் பதில் சொல்ல வேண்டும். அப்போலி மோதல் வழக்கில் கைதாகி இருக்கும் போலீஸ் பொறுக்கிகளை எப்போது, யார் என்கவுண்டர் செய்யலாம் என்று சொல்லவேண்டும்.
காஷ்மீர்- ஷோபியனில் இரண்டு பெண்களை பாலியல் வன்முறைக்குட்படுத்தி கொன்ற இந்திய ராணுவ பொறுக்கிகளை எப்படி என்கவுண்டர் செய்யலாம் என்று சொல்லட்டும். இக்கொலைக்கு விசாரணை நடத்த வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திலும் துப்பாக்கி சூடு நடத்தி படுகொலைகளை நிகழ்த்திய துணை ராணுவத்தினரை எந்த என்கவுண்ட்ரில் கொல்லலாம் என்றும் சொல்லவேண்டும்.
மணிப்பூரில் தனது சொந்த மக்கள் அஸ்ஸாம் ரைபில்ஸ் படையினரால் போலி மோதலில் கொல்லப்பட்டதை எதிர்த்தும், ஆர்ம்டு போர்சஸ் ஸ்பெசல் பவர் ஆக்ட்டை திரும்ப பெறக்கோரியும், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த காந்தி தேசத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி, இன்றும் நீதி கிடைக்காமல் போராட்ட்த்தை தொடர்கிறாரே ஐரோம் சர்மிளா, அவருக்கும் பதில் சொல்லவேண்டும்.
குஜராத்தில் 3000 முஸ்லீம் மக்களை படுகொலை செய்து பிணக்குவியலின் மேல் தேர்தல் நடத்தி முதலமைச்சராகி இன்றும் எந்த தண்டனையும் இன்றி சுதந்திரமாக வலம் வரும் இந்து பாசிஸ்ட் நரேந்திர மோடியை எப்போது யார் எப்படி என்கவுண்டர் செய்யலாம் என்றும் அந்த என்கவுன்டரை நடத்தக்கோரி போராடவும் முன் வரவேண்டும்.
போபாலில் 13000 மக்களை ஒரே இரவில் கொன்று, 5 லட்சம் மக்களை ஊனமாக்கிய வழக்கில் நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் அயோக்கிய தீர்ப்பு வந்திருக்கிறதே! அக்குற்றவாளிகளுக்கு, முக்கியமாக வாரன் ஆண்டர்சனை எப்போது யார் எப்படி என்கவுண்டர் செய்யலாம் என்றும் என்கவுன்டரை நடத்தக்கோரி போராடவும் முன் வரவேண்டும்.
மேலளவில் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் ஓடும் பஸ்ஸில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவரான முருகேசனை படுகொலை செய்த ஆதிக்க சாதி வெறியர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ள கோரி போராட வேண்டும்.
கயர்லாஞ்சியில், இந்த மனித சமூகமே வெட்கி குனியும் வகையில் தாயையும் மகளையும் கூட்டாக பாலியல் வன்புனர்ந்தும், அதே குடும்பத்தினர் மேலும் இரு ஆண்களையும் சேர்த்து பச்சை படுகொலையை செய்த மேல் சாதியினருக்கு மேல் ’சாதி வன்கொடுமை’ யின் கீழ் தீர்ப்பளிக்காமல், பலர் தப்பவிடப்பட்டிருக்கிறார்களே, அதற்காகவும் இவர்கள் தங்களது சமூக அக்கறையை இதே பாணியில் வெளிப்படுத்த வேண்டும்.
மேலும், இந்தியா முழுவதும், சாதி மாறி திருமணம் செய்த காரணத்திற்காக, கௌரவ கொலைகள் நடந்திருக்கிறதே, அக்கொலைகாரர்களுக்கு எதிராகவும் சமூக அக்கறையை வெளிப்படுத்த வேண்டும். ஹரியானாவில் கௌரவ கொலைகளுக்கு தீர்ப்பளிக்கும் ஜாட் மேல் சாதி பஞ்சாயத்துக்கள் இன்றும் திமிராக நடந்துகொள்கிறார்களே, அக்கொலைகாரர்களுக்கு எதிராகவும் சமூக அக்கறையை வெளிப்படுத்த வேண்டும்.
மோகன்ராஜ் என்கவுண்டரை ஆதரிக்கும் யோக்கியவானகள் பல்வேறு வழக்குகளில் ஒடுக்கப்பட்ட மக்களும், உழைக்கும் மக்களும் இந்த அரசாலும், நீதித்துறையாலும், இழுத்தடித்தும், குற்றவாளி தப்பவைக்கப்ட்டும் வஞ்சிக்கப்பட்டிருப்பதை பற்றி முதலில் கருத்து தெரிவித்த பின்னர் மோகன்ராஜின் கொலையை நாம் எல்லாரும் சேர்ந்தே கொண்டாடலாம்.
Friday, December 23, 2005
வரலாறு :
வரலாற்றை நம்மிடை கொனர்ந்த அன்றைய (பழைய) ஊடகங்கள் அனைத்தும் ( கல்வெட்டுகள், பட்டயங்கள், இலக்கியங்கள் மற்றும் பல) அதிகாரவர்கத்தால் அனுமதிக்கபட்டவை, அங்கீகரிக்கப்பட்டவை மட்டுமே....
இன்றய சனநாயக(???) உலகின் ஊடகங்கள், அடுத்து வரும் தலைமுறைக்கு வரலாற்றை கொண்டுசெல்ல கடமைப்பட்டிருக்கின்றன. இன்றய சினிமா, தொ(ல்)லை காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள், தங்களது வரலாற்று கடமையை உணர்ந்திருக்கின்றனவா???
அனைத்து ஊடகங்களும் மக்களை அறிவிலியாக வைத்திருக்க முயற்சிக்கின்றன, விரும்புகின்றன. அவற்றின் அறிவிலி தனத்தால் சமகால நிகழ்வுகளில் உண்மையை அறியமுடியாமல் போய்விடுகிறது. சமகால வரலாற்றை அறியமுடியாமல் நாம் வருங்கால சந்ததியினருக்கு எத்தகைய வரலாற்றை அளிக்கபோகிறோம்???
எதிர்காலத்தின் வரலாற்றை இயற்றும் உரிமையை இந்த ஊடக சர்வதிகாரிகளிடம் விட்டுவிடுவதா???
வணக்கம்.....
உண்மையென்றே நம்புகிறேன். உண்மையை தேடி கருத்தாடல்களுக்காக வலை பக்கம் வந்திருக்கிறேன். தோழர்கள் இங்கு நல்ல கருத்தாடல்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம் ( சிலவற்றை கட்டுடைக்கவும் செய்யலாம்) .......
/நன்றியுடன்....
ஷ்யாம்.